Thursday, April 9, 2015

இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி எதிர்கொள்வது?



வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள்,  பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில்  வைத்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு  போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் மட் பேக்’ (Mud pack)கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் மட் பேக்போட்டுக்கொள்ளலாம்.

அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலே, உடலில் நீரின் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.

கோடைக்கேற்ற உணவுகள்

நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு,  சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane