Thursday, April 9, 2015

கோடை கால குறிப்புகள்




உணவை மாற்றுங்கள்

மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை


நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்
களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம்.

வீட்டை கூல் ஆக்குங்கள்

மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் ஏ.ஸி இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரண்டு பெட்ரூம்களிலும் ஏ.ஸி வைத்திருப்பவர்கள்கூட எகிறும் மின் கட்டணத்துக்குப் பயந்து, ஒரே அறைக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என, எல்லோரும் ஒரே அறையில் நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு, மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிட, குடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம். கிடைக்கிற இடங்களில் எல்லாம் செடிகள் வளர்ப்பது, கூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பது, மாடியில் தோட்டங்கள் அமைப்பது, இளநிற பெயிண்டுகள் அடிப்பது என, வீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்து, செயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

நோ ஃப்ரிட்ஜ்

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ‘‘வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது?’’ என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான். அறை வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள், மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில், சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால், மண்பானை வாங்கும் முன் பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.

வெப்ப காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல், அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம்.
ஆஸ்பெஸ்டாஸ் அபாயம்கோடையில் நிழலுக்காக வீட்டின் முன்புறமோ, பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தற்காலிகக் கூரைகள் அமைப்பது வழக்கம். அந்த ஷீட் மெலிதாக இருப்பதால், சூரிய வைப்பத்தை அப்படியே உள்வாங்கி, நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகளைவிட, பல மடங்கு பாதிப்புகளை இந்த ஷீட்கள் நமக்கு ஏற்படுத்திவிடும். பலவகைப் புற்றுநோய்கள் இதனால் வரும் வாய்ப்பு இருப்பதால், உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஷீட்களைத் தடை செய்துள்ளன. வெயிலுக்குப் பயந்து மேற்கூரை போட திட்டமிடுபவர்கள் ஒலைக் கூரை, ஒடுகளால் செய்த மேற்கூரை போடலாம். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட வேண்டுமெனில், நான்கு புறமும் காற்றோட்டமான இடைவெளியுடன், மேற்பரப்பில் படரும் செடிகளை வளர்த்து, சூட்டை குறைத்துக்கொள்ளலாம்.

சாலையோர ஜூஸ் கவனம்

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும்  உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.

வியர்க்க வியர்க்கக் குளிக்காதீர்கள்!

தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கவைக்கலாம். வியர்வையோடு குளிப்பது, வியர்வை வழிய, வழிய முகம் கழுவுவது இரண்டுமே தவறு.

1 comment:

kanchana said...

GOOD INFORMTION

All ASPs & IPs are requested to update Member Database in Right pane